பாட்டி வீட்டில் பார்த்திருக்கிறேன் ... பலா கட்டையில் செய்த அஞ்சறைப் பெட்டியை ...
ரொம்ப பழசானாலும் அதன் அழகே தனி தான்.மேலே நகரும் மூடியுடன் கையடக்கமாய் பலவிதமான சுகந்தமான வாசனைகளுடன் ...சில்லறைக் காசுகளையும் பதுக்கிக் கொண்டு தேமேவென கிடக்கும்.
அதில் என்னென்ன போட்டு வைத்திருந்தார்கள் என்று அப்போது யோசித்ததில்லை.அதிலிருக்கும் சில்லரைகளே அப்போது முக்கியமாகப் பட்டிருக்கும்.
சில நாட்களுக்கு முன் சரவணா ஸ்டோர்ஸில் வட்டமாய் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக் காட்டி ...இதான் வசதியா இருக்கும் இப்போதைக்கு பலகை அஞ்சறைப் பெட்டி எல்லாம் தோதுப் படாது என்று அம்மாவும் தங்கையும் அதை போய் அஞ்சறைப் பெட்டி என்ற பெயரில் எடுத்து வந்தார்கள் ,எனக்கென்னவோ பிடிக்கவே இல்லை.
சீரகம்
மல்லி
கடுகு ,உளுத்தம் பருப்பு
சுக்கு
கட்டிப் பெருங்காயம்
வசம்பு
கடுக்காய்
கிராம்பு
விசேஷ நாட்கள் எனில் சில பொழுதுகள்
ஏலக்காய்
முந்திரிப் பருப்பு
கிஸ்முஸ் (உலர் திராட்சை )
வெந்தயம்
சோம்பு
ஓமம்
இப்படி ஒரு மினி நாட்டு மருந்துக் கடையாக அன்றைய அஞ்சறைப் பெட்டி இருந்திருக்கிறது என்பது எத்தனை நிஜம் !
இந்த பிளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டிக்கு ஏனோ அத்தனை கவர்ச்சி பத்தாது என்றே தோன்றி விட்டது.
என்ன தான் வடிவத்தில் அஞ்சறைப் பெட்டி போல இருந்தாலும் அது வெறும் டப்பா தான் என்னைப் பொறுத்தவரை .
நோட் :-
அஞ்சறைப் பெட்டி என்று தமிழில் கூகுள் அடித்தால் படம் ஒன்றும் வரக் காணோம் ..ஆங்கிலத்தில் அடித்ததில் இந்தப் படம் நன்றாக இருந்தது ,படம் உதவிக்கு நன்றி கூகுள்.ஆனால் இது கூட எனக்குத் தெரிந்த அஞ்சறைப் பெட்டி வடிவம் அல்ல தான்.நானறிந்தது பலகையால் ஆன செவ்வக வடிவப் பெட்டி.