பாயாசம் ...
இந்தப் பாயாசம் இருக்கே பாயாசம் ...இது எனக்கு ரொம்ப நாளாவே பிடிக்காத ஒரு பட்சணமா தான் இருந்தது,
இதை பானம்னு சொல்றதா பட்சணம்ன்னு சொல்றதாங்கற குழப்பம் வேற!
அந்தக் காலத்தில வீட்டுக்கு குறைஞ்சது மூணு பிள்ளைங்க கணக்குல நாடு இருக்கைல அத்தை பிள்ளை,சித்தி பிள்ளைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அமளி துமளிப் படும் போது ஏதாவது விசேஷங்கள் தவிர சும்மா இருக்கற நேரம்லாம் பாயாசம் வச்சு சாப்பிடற வழக்கம் இல்லை,அதான் கார்த்திகை விரதம்,ஏகாதசி விரதம்,இப்படி சில விரத நாட்களை ஸ்பெசலாக பாட்டி ஞாபகம் வைத்துக் கொள்வார்.அன்றைக்கு விரதத்தில் நிச்சயம் பாயாசம் உண்டு.பாயாசம் இல்லாமல் விரதமாவது ஒன்னாவது,பாயசம் இல்லைன்னா அது விரதமே இல்லைன்னு கையில அடிச்சு சத்யம் பண்ற அளவுக்கு சின்னப் பிள்ளைங்க நாங்களாம் அந்தப் பாயாசத்தின் பேர்ல அத்தனை பிரியமாவும் அவ்ளோ தெளிவாவும் இருந்தோம் அப்போ:)))
பொதுவா பாயசம்னா என்னலாம் சேர்ப்பாங்க அதுல ;பால்,சேமியா,ஜவ்வரிசி,முந்திரிப் பருப்பு,ஏலக்காய்,கிஸ் முஸ் பழம்(உலர் திராட்சை) போதாக்குறைக்கு கடைசியா தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு இறக்கி பரிமாறுவாங்க.இது ஒரு வகைப் பாயாசம்.
இன்னொரு வகை பருப்புப் பாயசம் ,இதை எப்படி செய்வாங்கனா...பாசிப்பருப்புல வெல்லம் சேர்த்து வேக வைத்து ஏலக்காய் ,காய்ஞ்ச திராட்சை ,முந்திரிப்பருப்பெல்லாம் வழக்கம் போலவே போட்டு அடுப்பை அணைக்க முன்னாடி சிறு தீயில தேங்காய் துருவல் போட்டு இறக்கிப் பரிமாறுவாங்க,இதுக்குப் பேர் தான் பருப்புப் பாயசம்.
இதெல்லாம் விட இன்னொரு வகை என்னை மாதிரி சிலருக்கு சேமியா போட்ட பாயசம் பிடிக்கலைனா சேமியா இல்லாம வெறும் ஜவ்வரிசிய வேக வச்சு பாலலை சுண்டக் காய்ச்சி அதுல இதைக் கலந்து வழக்கம் போல முந்திரி,காய்ஞ்ச திராட்சை,ஏலக்காய் போட்டு இறக்கலாம்,இதுக்குப் பேர் தான் பால் பாயாசம்.இதுல தேங்காய் எல்லாம் போடத் தேவை இல்லை,சிலருக்கு தேங்காய் போட்டா பிடிக்கவும் பிடிக்காது.
இதை தவிர இன்னொரு வகை பாயசம் ,பச்சரிசி மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சு குட்டி குட்டி உருண்டையா வெந்நீர்ல போட்டு வேக வச்சு எடுத்து அதை பால்ல கலந்து ஏலக்காய் எல்லாம் போட்டு ஒரு வகை பாயசம் பண்ணுவாங்க,இதுக்கு தெலுங்குல உண்டராலு பாயசம்னு பேர்.கடும் சளித் தொந்திரவு இருந்தா இப்படி செஞ்சு கொடுப்பாங்க,
இதெல்லாத்தையும் விட ஐயப்பன் கோயில்கள்ல நம்ம தமிழ் நாட்டு சர்க்கரைப் பொங்கல் மாதிரியே இருக்கற ஒரு பட்சணத்தை பாயசம்னு பிரசாதமா தராங்க ,அபார ருசி ஆனா ஒரு அளவுக்கு மீறி சாப்பிட முடியாது.திகட்டும் ,இதே போல கேரளா ரெஸ்ட்டாரென்ட்ஸ் எங்கலாம் இருக்கோ அங்கலாம் சக்கப் பழப் பாயசம்ன்னு ஒரு வகைப் பாயசம் கிடைக்கும்,பலாப் பழத்துல பண்ணுவாங்களாம்,இதுவும் பயங்கரத் திகட்டல் தான்,ஆனா டேஸ்ட்டா இருக்கு.
இவ்ளோ தான் எனக்குத் தெரிஞ்ச பாயசங்கள்.
இதை தவிர இன்னொரு பாயசம் எனக்குத் தெரியும்னா ...அது தி.ஜானகிராமன் எழுதின "பாயசம்" சிறுகதை தான் ,இன்பாக்ட் நான் இந்த பதிவு எழுதறதுக்கே அவரோட அந்த சிறுகதை தான் காரணம்னும் சொல்லலாம். அருமையான சிறுகதை ,தி.ஜா சிறுகதை தொகுப்பு கிடைச்சா நீங்களும் படிங்க.
Sunday, February 7, 2010
Sunday, December 13, 2009
அஞ்சறைப்பெட்டி
பாட்டி வீட்டில் பார்த்திருக்கிறேன் ... பலா கட்டையில் செய்த அஞ்சறைப் பெட்டியை ...
ரொம்ப பழசானாலும் அதன் அழகே தனி தான்.மேலே நகரும் மூடியுடன் கையடக்கமாய் பலவிதமான சுகந்தமான வாசனைகளுடன் ...சில்லறைக் காசுகளையும் பதுக்கிக் கொண்டு தேமேவென கிடக்கும்.
அதில் என்னென்ன போட்டு வைத்திருந்தார்கள் என்று அப்போது யோசித்ததில்லை.அதிலிருக்கும் சில்லரைகளே அப்போது முக்கியமாகப் பட்டிருக்கும்.
சில நாட்களுக்கு முன் சரவணா ஸ்டோர்ஸில் வட்டமாய் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக் காட்டி ...இதான் வசதியா இருக்கும் இப்போதைக்கு பலகை அஞ்சறைப் பெட்டி எல்லாம் தோதுப் படாது என்று அம்மாவும் தங்கையும் அதை போய் அஞ்சறைப் பெட்டி என்ற பெயரில் எடுத்து வந்தார்கள் ,எனக்கென்னவோ பிடிக்கவே இல்லை.
சீரகம்
மல்லி
கடுகு ,உளுத்தம் பருப்பு
சுக்கு
கட்டிப் பெருங்காயம்
வசம்பு
கடுக்காய்
கிராம்பு
விசேஷ நாட்கள் எனில் சில பொழுதுகள்
ஏலக்காய்
முந்திரிப் பருப்பு
கிஸ்முஸ் (உலர் திராட்சை )
வெந்தயம்
சோம்பு
ஓமம்
இப்படி ஒரு மினி நாட்டு மருந்துக் கடையாக அன்றைய அஞ்சறைப் பெட்டி இருந்திருக்கிறது என்பது எத்தனை நிஜம் !
இந்த பிளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டிக்கு ஏனோ அத்தனை கவர்ச்சி பத்தாது என்றே தோன்றி விட்டது.
என்ன தான் வடிவத்தில் அஞ்சறைப் பெட்டி போல இருந்தாலும் அது வெறும் டப்பா தான் என்னைப் பொறுத்தவரை .
நோட் :-
அஞ்சறைப் பெட்டி என்று தமிழில் கூகுள் அடித்தால் படம் ஒன்றும் வரக் காணோம் ..ஆங்கிலத்தில் அடித்ததில் இந்தப் படம் நன்றாக இருந்தது ,படம் உதவிக்கு நன்றி கூகுள்.ஆனால் இது கூட எனக்குத் தெரிந்த அஞ்சறைப் பெட்டி வடிவம் அல்ல தான்.நானறிந்தது பலகையால் ஆன செவ்வக வடிவப் பெட்டி.
Subscribe to:
Posts (Atom)